மக்கள் தங்களுக்கென்று கொண்டுள்ள வாழ்க்கை முறைகளை செல்லாததாக்கி சட்டத்தின் முன் நிலைநாட்ட முடியாதபடி செய்வதே பொது சிவில் சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
தற்போதைய தலைமுறைக்கு நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்துவதை விடுத்து அடுத்தடுத்த தலைமுறையை பகடையாக கொண்டு தனது நோக்கங்களை சாதித்துக் கொள்ளும் இயங்குமுறையை கொண்டது.
ஒருபுறம் அவரவர் வீட்டில் இவைதான் நமது திருமண முறை, வாழ்க்கை வழக்கங்கள் என்று சொல்லித் தந்து பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்ப்பார்கள். வாழ்வின் இல்லற கட்டத்தை கடக்க உரியதொரு தொழிலை அடைய ஆவண செய்ய வேண்டி பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவார்கள்.
அவற்றை நிறைவேற்றித் தருவதை விட்டு விட்டு, கல்விக்கான கட்டமைப்பை துஷ்பிரயோகம் செய்து பொது சிவில் சட்ட விசயங்கள் அரசால் கல்விக் கூடங்களில் போதிக்கப்படும்.
இதன் மூலம் அவரவர் வாழ்க்கை முறைகளோடு அடுத்தடுத்த தலைமுறைக்கு குழப்பம் முரண்பாடுகள் ஒவ்வாமை உண்டாகும். அது ஒரு கட்டத்தில் ஆங்காங்கே பிரச்சனைகளாக வெடிக்கும். அப்படி முரண்பாடுகளை ஏற்படுத்துவோர் சீர்திருத்தவாதியாகளாக முன்னுதாரணமானவர்களாகக் கொண்டாடப்படுவர்.
அது சமயம் மரபுகளை எடுத்துச் சொல்லி அவற்றை நிலைநாட்ட முற்படும் முயற்சிகளை சட்டத்தின் பாதுகாவலர்களாக அறியப்படும் காவல்துறையோ நீதிமன்றமோ, சட்டம் இப்படியாக உள்ளதால் உங்கள் மரபுகள் எதுவும் சட்டத்தின் முன் எடுபடாது. எங்களால் சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்று கைவிடுவர்.
நேரடியாக சாமான்ய மக்களால் விளங்கிக் கொள்ள இயலாத அவர்கள் மரபுகளை ஒழிக்கும் இத்தகைய சூது நிறைந்த செயல்பாட்டு முறையை கொண்டது பொது சிவில் சட்டம்.
ரயில்வே துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை, தொழிற் துறை, கப்பல் போக்குவரத்து துறை, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு துறை என பல்வேறு துறைகளை கொண்டுள்ள அரசு, அவற்றின் அன்றாட பணிகளை அதற்குரிய அமைச்சர்களை அதிகாரிகளை கொண்டு மேற்கொள்கிறது. எனவே அவற்றிற்கான விதிகளை மக்கள் அனைவருக்கும் சமமாக அரசே தான் இயற்றி செயல்படுத்தி நிலைநாட்ட வேண்டும்.
ஆனால் ஒருவருடைய வாழ்க்கை முறை என்பது அவரது குடும்பம் உறவினர்கள் சுற்றத்தார் என கட்டமைக்கப்படுகிறது. அவரவர் சமயம், குடி, நாட்டின் பகுதி, மரபு என பல்வேறு ஆதாரங்களில் இருந்து அவற்றை பெற்று தங்கள் வாழ்க்கையை மக்களே மேற்கொண்டு வாழ்ந்து நிர்வகித்து நிலைநாட்டியும் வருகிறார்கள்.
மக்களுக்கிடையே வாழ்வின் நோக்கம், அதை நோக்கிய பயணம், அதற்கேற்றபடி முன்னுரிமைகள் என்று வருகிற போது வாழ்க்கை முறைகளில் வேறுபாடுகள் வருகின்றன.
மக்களுடைய வாழ்க்கைகளை அரசு வாழ்வதில்லை. அதன் அன்றாட நுணுக்கங்கள் நுட்பங்கள் அரசின் வரம்பிற்கு அப்பாற்பட்டவை. எனவே அதற்கான விதிகளை பொது சிவில் சட்டம் என்று இயற்ற முற்படுவது அடிப்படையில் தவறானதாகும்.
மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் மானுடவியல் துறை (Anthropological Survey of India) செயல்படுகிறது. அது 1985 ஆம் ஆண்டு இந்திய தொல்குடிகள் (People of India) என்ற மிகப்பெரியதொரு திட்டத்தினை செயல்படுத்தியது. கே. எஸ். சிங் என்பாரது தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பணியின் மூலமாக இந்தியாவில் 6748 தொல்குடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை முறைகளை ஆவணப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி தேசத்தின் நான்கு திசைகளிலுமாக 4635 தொல்குடிகளின் வாழ்க்கை முறைகள் ஆவணப்படுத்தப்பட்டு 120 நூல்களின் தொகுப்பாக People of India என்று அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் அத் தொல்குடிகளின் வாழ்க்கை முறை, திருமணத்திற்கான கருதுகோல்கள், சொத்துக்கள் விவகாரம், மத்யஸ்த முறைகள் போன்ற அடிப்படை விவரங்கள் நமக்கு கிடைக்கின்றன.
கள நிலவரம் இப்படி இருக்க, இவற்றையெல்லாம் முற்றாக ஒழித்துக் கட்டும் முயற்சியாக, பொது சிவில் சட்டம் எனும் தீர்வு முன்வைக்கப்படுகிறது. இந்த துறை எத்தகைய முயற்சியை மேற்கொண்டதோ அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு முயற்சியாவது எடுத்து இந்த குடிகளின் முறையான அமைப்புகளை இனங்கண்டு அவர்களுடைய மொழியில் அவர்களுடைய கருத்துக்கள் எல்லாம் கோரப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து நவீன மேலோட்டமான சட்ட வாக்கியங்களை மட்டும் கருத்தில் கொண்டு அதை நிலைநாட்டப்போவதாக அனைத்து மக்களின் வழக்குகளையும் முடித்து விடப் பார்க்கிறது மத்திய அரசு.
இந்திய அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை என்ற பொருளில் செக்யூலர் என்ற வார்த்தை அவசர நிலை காலத்தின் போது புகுத்தப்பட்டது. கிறிஸ்தவ இஸ்லாமியர்களை மென்மேலும் அவரவர் சமயத்தை வாடிகன் அரேபிய தரத்திற்கு அனுசரிக்க பரப்பிடச் செய்ய துணை செய்வதையும் இந்துக்களை அவர்களுடைய நம்பிக்கைகளை முற்றாக இழக்கச் செய்வதற்கு துணை போவதையும் நோக்கமாகச் கொண்டு இயங்குவது இந்திய மதச்சார்பின்மையின் சிறப்பம்சமாகும்.
அரசு தான் மேற்கொள்ளும் பணிகளில் அதை நாடிவருவோருக்கு மத பாரபட்சமின்றி அவற்றை வழங்குவது என்ற அடிப்படை சிதைந்து, அதையே ஒரு மதம் போல ஆக்கிக் கொண்டு ஜவஹர்லால் நேரு வழி பலர் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களை அவர்களுடைய நம்பிக்கைகளை முற்றாக இழக்கச் செய்வதற்கு செயல்பட்டு வருகிறார்கள்.
இந்துக்களுடைய திருமண், திருநீறு, சிகை போன்ற சமய அடையாளங்களை கேலிப் பொருள் ஆக்குவது, பிறருடைய சமயச் சின்னங்களுக்கு மரியாதையும் ஊக்கமும் அளிப்பது, இந்துப் பெண்களுடைய தாலி விரதங்களை அடிமைத்தனம் என பரப்புவது இஸ்லாமிய பெண்களுடைய பர்தா போன்ற அடையாளங்களை அவர்களே விரும்பி அணிவதாக ஜோடிப்பது,
இந்துப் பண்டிகையான தீபாவளியின் போது பட்டாசு வெடித்தால் மாசு ஏற்படுவதாக அதனை தடை செய்யக் கோருவது, ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு பட்டாசு வெடிப்பதில் பாராமுகமாய் இருப்பது. எது தமிழ்ப் புத்தாண்டு என்று குழப்பம் விளைவிப்பது, காளைகள் யானைகள் மீது கரிசனம் காட்டுவதாக கோவில் ஜல்லிக்கட்டுகளுக்கு ஒரு பக்கம் தடை வாங்குவது, மற்றொரு பக்கம் மாற்று மதத்தவரை உறசாகப்படுத்தி காளைகளை வெட்டி பீப் பார்ட்டி நடத்துவது.
கத்தோலிக்கம், ஆங்கிலிக்கன், லூத்தரன், பெந்தெகோஸ்தே என எந்தப் பிரிவு கிறிஸ்தவ அமைப்பானாலும் எவ்வித சொல்லத்தக்க கட்டுப்பாடுகளும் இன்றி, அவர்கள் ஸ்தாபனம் அவர்கள் விதி என சுதந்திரமாக செயல்பட விடுவது. ஆனால் இந்துக்களுடைய கோவில்கள் என்றால் அறநிலையத்துறையை புகுத்தி அதன் செயல்பாடுகளை முடக்கி பல ஆலயங்களில் ஒரு வேளை பூஜை கூட இல்லாது செய்வது என கடந்த எழுபதாண்டுகால மதச்சார்பற்ற நடவடிக்கைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இவற்றின் மற்றுமொரு பரிமாணம் தான் இந்துக்கள் காலா காலமாகக் கொண்டு தொடர்ந்து வருகிற வாழ்க்கை முறைகளை கெடுத்து சின்னாபின்னம் ஆக்குவது. பொது சிவில் சட்டம் என புதிதாக கொண்டு வந்துதான் அதனைச் செய்ய வேண்டும் என்றில்லை. நேரு 1957 ஆம் ஆண்டு வாக்கில் இந்து கோட் பில்கள் என்று சுமத்தி அதனை அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே செய்து விட்டார்.
அப்போது இந்துக்களுக்காக செயல்பட்டு களமாடி வந்த ஆர். எஸ். எஸ், ஜன சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்பினரும் அதற்கெதிராக இயக்கங்களை நடத்தினர். ஜன சங்கத்தின் தலைவர் ஷ்யாம பிரசாத் முகர்ஜி, யார் கிறிஸ்தவத்தில் இருந்து சீர்திருத்தம் பேசி பிரிந்த ஐரோப்பியர்களை பார்த்து அவர்களைப் போல வாழ விழைகிறார்களோ அவர்களுக்கு இதை பொறுத்தலாமே ஒழிய ஒட்டு மொத்த இந்துக்கள் மீதும் சுமத்துவது தவறு என்று பாராளுமன்றத்தில் முழங்கினார்.
மதச்சார்பின்மை பேசும் காங்கிரசிற்கு துணிச்சல் இருந்தால் இஸ்லாமியர்கள் மீது இதை சுமத்திக் காட்டட்டும் என்று அவர்கள் பாசாங்குத்தனத்தை மக்கள் முன் கொண்டு சேர்த்தனர். இந்துக்கள் மீது கொள்ளைப்புறமாக செயல்படுத்த நேரு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை மெத்தனமாக இருந்து அனுமதித்து விடக் கூடாது என்று இந்துக்களுக்கு அறைகூவல் விடுத்தார் அன்றைய ஆர். எஸ். எஸ். தலைவர் குருஜி கோல்வால்கர்.
தொடர்ந்து வந்த பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதி அறிக்கையில் ஜன சங்கம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள விவரங்களை கருத்தில் கொள்ளாமல், நேருவால் வஞ்சகமாக இந்துக்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட இந்து கோட் பில்களை ரத்து செய்வோம் என இந்துக்களுக்கு உறுதி அளித்தது. தமது வாழ்நாளின் கடைசி நாட்களில் கூட கே. ஆர். மல்கானி என்பவருக்கு அளித்த பேட்டியில் இந்து கோட் பில்கள் தவறே என்று சொல்லியதோடு பொது சிவில் சட்டம் தேசங்களுக்கு சர்வ நாசம் என்பதை ஆணித் தரமாக வலியுறுத்தியுள்ளார் குருஜி கோல்வால்கர்.
முஸ்லீம்களை முன்னிட்டு பொது சிவில் சட்டம் என்று இன்று இந்துத்வர்களால் வலியுறுத்தப்படுவதெல்லாம், இந்து கோட் பில்கள் கொண்டு வராத படிக்கு மேற்கொண்ட மேற்படி முயற்சிகள எல்லாம், ஆட்சி அதிகாரங்களை தங்கள் வசம் வைத்திருந்த போலி மதச்சார்பற்றவாதிகளின் சூழ்ச்சிகளின் முன் எடுபடாத கையறு நிலையில், அதன் விளைவுகளால் இந்துக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தனக்கு ஒரு கண் போனது போல இஸ்லாமியர்களுக்கும் போகட்டும் என்று முன்வைக்கப்படும் பக்குவமற்ற தொலைநோக்கு பார்வையற்ற முதிர்ச்சியற்ற யாருக்கும் தீர்வளிக்காத கொந்தளிப்புகளே.
பிரிவினைக்கு வித்திட துணைபோக வேண்டி 1937 ஆம் ஆண்டு ஷரியா அடிப்படையில் என முஸ்லீம் பர்சனல் லா கொண்டு வரப்பட்டது. அப்போதே அதனை பல இந்திய இஸ்லாமிய பிரிவினர் எதிர்த்தனர். வழிபாட்டுக்கு இஸ்லாமிய முறைகளையும் சொத்து விவகாரங்களுக்கு இந்து வழக்கங்களையும் கொண்டிருந்த சமூகங்கள் இவை.
மேலும் அது ஷியாக்கள் சார்புடையது போன்ற கருத்துக்களும் மற்ற இஸ்லாமிய பிரிவினர்களால் முன்வைக்கப்பட்டது. அப்போதைய ஆட்சியாளர்களுடைய ஆசி இருக்க அதனை அனைத்து இஸ்லாமிய பிரிவுகள் மீதும் ஒரு வழியாக சுமத்தி விட்டனர் அன்று.
இஸ்லாமியர்களாக இனங்காணப்படுவோரிடையே ஷரியாவின் அடிப்படையிலும் அதல்லாதும் வழக்கு வேறுபாடுகள் பல உள்ளன. இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரே முஸ்லீம் பர்சனல் லா என்று சுமத்தப்பட்டதன் தொடர் விளைவே ஷா பானு விவகாரமும். இதற்கு தீர்வு இந்துக்களையும் சேர்த்த பொது சிவில் சட்டமன்று.
மாறாக இஸ்லாமியர்களிடையே உள்ள வழக்கு வேறுபாடுகளுக்கும், அவரவர் வழக்குகளின் படி தொடரச் செய்ய தற்போதைய ஒரே முஸ்லிம் பர்சனல் லா வில் இருந்து பிரிய வழி வகை செய்வதே.
இதன் மூலம் குலா போன்ற பெண்கள் விவாகரத்து செய்யும் நடைமுறைகள் தங்களிடையே இருப்பதாக சொல்லும் முஸ்லீம் பிரிவினர் அவற்றை மறுக்கும் பிரிவினரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவர்.
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாமலேயே ஷா பானு விவகாரத்திற்கு காரணமான முத்தலாக்கிற்கு மத்திய அரசு தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சட்டம் இயற்றிவிட்டதும் இஸ்லாமியர்களை முன்வைத்து பொது சிவில் சட்டம் தேவை என்ற வாதத்தை முறித்துவிட்டது. குடும்பக் கட்டுப்பாடு போன்றவை பிரச்னையென்றால் அதற்கும் இதே வழியிலேயே பொது சிவில் சட்டத்தின் தேவையில்லாதே சட்டம் கொண்டு வரலாம்.
இந்து கோட் பில்கள் தங்களுக்கு பொருந்தாது என்ற விழிப்புடன் தொடர்ந்து செயல்பட்ட சீக்கியர்கள், 2012 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மூலம் பாஜக எம். பிக்களின் ஆதரவையும் பெற்று இந்து கோட் பில்களில் இருந்து வெளியேறி, ஆனந்த் திருமணச் சட்டம் என்ற சீக்கிய திருமணச் சட்டம் பெற்றுக் கொண்டு விட்டார்கள். இதே இந்திய திருநாட்டில் பார்சிகள் அவர்களுக்கென்ற திருமண சிவில் சட்டங்கள், அவற்றை அமல்படுத்தும் அதிகாரம் உள்ள பஞ்சாயத்து வரை பெற்று தன்னிறைவு கொண்ட வளமான சமுதாயமாக இன்னும் ஒரு படி மேலே போய் நம்முன் வாழ்ந்து வருகிறார்கள்.
வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பது போல எந்த சமூகம் கேட்கிறதோ அதற்கு செய்து தர மத்திய அரசுகள் தயாராக இருப்பது சீக்கியர்கள் விசயமாகவும், வனவாசிகள் விசயத்தில் பொது சிவில் சட்டம் கூடாது என்று எழும் குரல்களுக்கான ஆதரவு போக்கில் இருந்தும் நமக்குத் தெரிகிறது.
மற்ற இந்து சமுதாயங்களும் விழித்து கொண்டு இந்து கோட் பில்களில் இருந்து வெளிவந்து தங்கள் வாழ்க்கை முறைகளை தக்க வைத்து தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதற்கான ஏற்பாட்டை செய்து தர மத்திய அரசை கோர வேண்டும். அதையே செய்து தர மத்திய அரசு கடமை பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பதை பாஜக தமது தேர்தல் அறிக்கையில் இருந்து நீக்கிவிட வேண்டும்.
ஆளும் பாஜக அது ஜன சங்கமாக இருந்த போது இந்துக்களுக்கு இந்து கோட் பில்களை ரத்து செய்வோம் என்றளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பொது சிவில் சட்டம் தேசங்களுக்கு நாசம் என்ற குருஜி கோல்வால்கரின் வழி நின்று, அரசியல் சாசனத்தில் இருந்து அப்பிரிவு நிரந்தரமாக நீக்கப்பட வழிவகை செய்ய வேண்டும்.