பெண்ணுரிமைகளும் சமூக தீமைகளும்
காலாகாலமாக பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர். பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்துள்ளது. பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆண்களுக்கு பலதார மணம் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். பெண்களுக்கு கணவனுடைய சொத்தில் பங்கு வழங்கப்படவில்லை. பெண்களுக்கு பெற்றோருடைய சொத்தில் பங்கு வழங்கப்படவில்லை.
பெண் சிசுக் கொலை நாட்டில் நிலவி வந்துள்ளது. இளவயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதால் நிறைய சிக்கல்கள் வருவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் பிள்ளைப் பெறும் இயந்திரமாக கருதப்பட்டார்கள். விதவையான பெண்கள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்படவே இல்லை.
கணவனை இழந்த பெண்ணுக்கு விதவையாக வாழ்வதோ கணவனோடு உடன்கட்டை ஏறுவதோ மட்டுமே தீர்வாக இருந்துள்ளது. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை இல்லை. வேற்று மதத்தவரை திருமணம் செய்து கொண்ட பிறகு முந்தைய மதத்தை கடைபிடித்தாலும் அம்மதத்தவராக பெண்கள் கருதப்படுவதில்லை.
பெண் விடுதலையை உறுதி செய்யவும் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு உரிமைகள் பெறவும் பொது சிவில் சட்டம் ஒன்றே தீர்வு. இந்துக்கள் தொடர்பாக இவையெல்லாம் வெவ்வேறு சட்டங்கள் வாயிலாக சரி செய்யப்பட்டுவிட்டாலும் இஸ்லாமியப் பெண்கள் விசயத்தில் இன்னும் தேக்கம் நிலவுகிறது. எனவே அனைத்து மதத்து பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக சம உரிமை பெற்றிட பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்திய சமூகம் முன்னேறாமல் இருப்பதற்கு எண்ணற்ற சாதிகள் அவற்றின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதே காரணம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் பிரச்சனைகள் மறைய சாதிகள் ஒழிக்கப்படவேண்டும். இந்தியர் என்று அனைவரும் கருதப்பட்டு ஒரே பொது சிவில் சட்டத்திற்குள் கொண்டு வரப்படுவது மட்டுமே இதற்கு தீர்வு.
உலகில் எல்லா நாட்டிலும் பொது சிவில் சட்டம்தான்
உலகில் இந்தியாவைத் தவிர முன்னேற்றம் அடைந்து விட்டதாக கருதப்படும் எந்த மேற்கத்திய நாட்டினை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் பொது சிவில் சட்டத்தையே வைத்துள்ளார்கள். அமேரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்த்துகல் என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அவை பொது சிவில் சட்டங்களைத் தான் கொண்டுள்ளன. எனவே முன்னேறிய நாடுகளை போல முன்னேறுகிற நாடுகளும் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.
கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் பைபிள் பொதுவான ஒரே மத நூலாக இருக்கிறது. அவர்கள் அதனடிப்படையில் வாழ்க்கை முறை என கொண்டுள்ளார்கள். முஸ்லீம்களை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு குரான் ஆதார நூலாகத் திகழ்கிறது. ஷரியத் அடிப்படையிலான சட்ட திட்டங்களை கொண்டுள்ளார்கள். இந்துக்கள் சாதிகளாக பிளவு பட்டிருக்கிறார்கள். ஆயினும் இந்துக்களும் இந்து கோட் பில்களை அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் வழக்குகளை இந்து கோட் பில்கள் என்று தொகுத்து வரையறுத்துக் கொண்டுள்ளார்கள்.
ஆயினும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதால் இப்படி மதத்திற்கு மதம் சட்டம் வைத்துக் கொள்ள அனுமதிக்க கூடாது. இவையனைத்தும் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு மாற்றப்பட வேண்டும். உலகளாவிய உண்மைகளோடு போக்குகளோடு பொருந்த வேண்டும்.