பொது சிவில் சட்டம் எனும் சூழ்ச்சி

மக்கள் தங்களுக்கென்று கொண்டுள்ள வாழ்க்கை முறைகளை செல்லாததாக்கி சட்டத்தின் முன் நிலைநாட்ட முடியாதபடி செய்வதே பொது சிவில் சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். தற்போதைய தலைமுறைக்கு நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்துவதை விடுத்து அடுத்தடுத்த தலைமுறையை பகடையாக கொண்டு தனது நோக்கங்களை சாதித்துக் கொள்ளும் …

இந்தியாவின் சிறந்த வழக்குகளின் அடிப்படையில்…

காலாகாலமாக இந்தியாவில் பல சிறந்த வாழ்க்கை முறைகள் நிலவி வந்துள்ளன. எனவே இந்திய வாழ்வியல் கண்ணோட்டங்களின் அடிப்படையில் பொது சிவில் சட்டமாக எல்லாருக்குமாக இயற்ற வேண்டும். இந்நாட்டிலே சிறந்த வழக்குக்கள் என்றால் யாருடைய வழக்கு ? எத்தகைய வழக்கு ? எவ்வழக்கு எதன் பொருட்டு எடுத்துக் கொள்ளப் படப் போகிறது ? அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுவிட்டதா ?

மதச் சுதந்திரமும் பாதிக்காமல் அரசியல் சாசனப்படி…

அனைத்தோடும் தொடர்புடைய மத நிகழ்வுகளை அவரவர் சடங்குகள் படியும் வழக்குகள் படியும் நடத்திக் கொள்ளலாம். எனவே மதச்சுதந்திரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிறப்பு தத்தெடுப்பு வாரிசு திருமணம் விவாகரத்து வழியாக எழும் உரிமைகள் மதத்தால் வழிகாட்டப்பட வேண்டுமா அரசியல் சாசன உத்தரவாதங்களாலா ? பிரச்சனை என்று வந்து விவகாரங்கள் பொதுவில் வந்துவிட்டால் அவரவருடைய வழக்குகளையெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது.

காலத்துக்கு ஏற்ற மாற்றம், சட்டத்தின் ஆட்சி, தனி நபர் சுதந்திரம்

மாற்ற முடியாத காலத்துக்கு ஏற்ப மாறாத ஒரே நூல் ஒரே விதி எனக் கொண்டிருந்தால் கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகங்களைப் போல் நாமும் தேக்கம் அடைந்து விடுவோம். இனியும் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் மதங்கள் என ஒன்றையே பிடித்து் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. பொது சிவில் சட்டம் இல்லாது போனால் சட்டத்தின் ஆட்சி நடக்காது போய்விடும். கட்டப் பஞ்சாயத்து பெருகிவிடும். தடி எடுத்தவனல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுவான்.

பெண்ணுரிமைகள் சமூக தீமைகள் உலகம் தழுவிய போக்கு

ஆண்களுக்கு பலதார மணம் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். பெண்களுக்கு கணவனுடைய சொத்தில் பங்கு வழங்கப்படவில்லை. முன்னேற்றம் அடைந்து விட்டதாக கருதப்படும் எந்த மேற்கத்திய நாட்டினை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் பொது சிவில் சட்டத்தையே வைத்துள்ளார்கள். அமேரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்த்துகல் என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அவை பொது சிவில் சட்டங்களைத் தான் கொண்டுள்ளன.

முஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் இந்துக்களுக்கு ஒரு நியாயமா?

அரசு முன்வைக்கும் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை இந்துக்களை மட்டுமே கடைபிடிக்கச் செய்கிறார்கள். எனவே இஸ்லாமியர்களையும் கடைபிடிக்கச் வைக்க பொது சிவில் சட்டம் வேண்டும். திருமண வயது என்று வருகிற போது முஸ்லீம் பெண்கள் வயதுக்கு வந்திருந்தால் போதும் என்று முஸ்லீம் பர்சனல் லா வில் உள்ளது. ஆனால் இந்துக்களை பொருத்த வரை பெண்ணின் திருமண வயது 18 என்று இருக்கிறது.

பொது சிவில் சட்ட மறுப்பு: பின்னணி

இந்து என்ற பெயரில் இவை இயற்றப்பட்ட போதே இந்துக்கள் இவற்றை கடுமையாக எதிர்த்தார்கள். இந்த நிலையில் இந்திய குடிமக்களுக்கெல்லாம் பொதுவான சிவில் சட்டம் என்று கொண்டு வரப்படுவதால் நிரந்தரமாக பாதிப்படையப் போவது மற்ற எவரையும் விட இந்துக்களே என்பது உறுதியாகப் புலப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க இந்துக்களில் அரசியல் ஈடுபாடு கொண்டு செயல்படும் பலரும் கூட தங்கள் சொந்த வாழ்க்கை என்று வருகிறபோது மரபான தங்கள் குடிவழக்குகளையே அனுசரித்து வருகிறார்கள். ஆனால் வெளியே பொது சிவில் சட்டத்தை உறுதியாக ஆதரித்தும் வருகிறார்கள்.