இந்துக்களில் அனேகம் பேர் இன்றளவும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வழக்குகளுக்கு தங்களுடைய தொல்குடிகளின் வழி வரும் வழக்குகளையே தொடர்ந்து அனுசரித்து வருகின்றோம். இந்திய அரசு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள டைரக்டிவ் பிரின்சிபில்ஸ் ஆப் ஸ்டேட் பாலிசியின் கீழ் வருகின்ற பொது சிவில் சட்டம் என்ற பிரிவிற்கான சட்டங்களை நடைமுறைகளை வகுக்கப் போவதாக சட்டக் கமிசன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் முயற்சிகளை மேற்கொண்டது.
மக்களுடைய வாழ்க்கை முறைகளை மாற்றும் அடிப்படை நோக்கம் கொண்ட பொதுவான சிவில் சட்டம் ஏற்கனவே இந்துக்கள் மீது இந்து கோட் பில்கள் என்ற பெயரிலும் இந்திய பீனல் கோட்களின் சில பிரிவுகளின் வாயிலாகவும் அமலில் இருக்கிறது. இவை இந்துக்களின் சம்மதம் பெறாமலே இந்துக்கள் மீது சுமத்தப்பட்டவை.
இவை மரபாக இந்து குடிகள் அனுசரித்து வரும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை முறைகளோடு பல வகைகளிலும் முரண்பாடுகளை கொண்டவையாக திகழ்கின்றன. இந்து என்ற பெயரில் இவை இயற்றப்பட்ட போதே இந்துக்கள் இவற்றை கடுமையாக எதிர்த்தார்கள். இந்த நிலையில் இந்திய குடிமக்களுக்கெல்லாம் பொதுவான சிவில் சட்டம் என்று கொண்டு வரப்படுவதால் நிரந்தரமாக பாதிப்படையப் போவது மற்ற எவரையும் விட இந்துக்களே என்பது உறுதியாகப் புலப்படுகிறது.
நிலைமை இப்படி இருக்க இந்துக்களில் அரசியல் ஈடுபாடு கொண்டு செயல்படும் பலரும் கூட தங்கள் சொந்த வாழ்க்கை என்று வருகிறபோது மரபான தங்கள் குடிவழக்குகளையே அனுசரித்து வருகிறார்கள். ஆனால் வெளியே பொது சிவில் சட்டத்தை உறுதியாக ஆதரித்தும் வருகிறார்கள். தங்களுடைய மரபான வாழ்க்கை முறைக்கு அரசின் முறையான அங்கீகாரம் வேண்டும் என கோருபவர்களாக செயல்படுபவர்களாக இவர்கள் இல்லை.
உங்களுடைய வழக்குகள் இதனால் நாசமடைவதற்கு சம்மதமா என்றால் மௌனமே இவர்களில் பலரிடமிருந்து பதிலாக நமக்கு கிடைக்கிறது. இவர்கள் தலைமுறை வரை மரபு வழி பெறப்படும் வாழ்க்கை முறைகளை தொடர்ந்து விட்டு அடுத்த தலைமுறை அதற்கு முரணான பாதைகக்கு இச்சட்டங்களால் மாற்றப்படுவதை மௌனமாக அனுமதிப்பதாகவும் புலப்படுகிறது.
பொது சிவில் சட்டம் எதற்காக கொண்டு வரப்பட வேண்டும் என்று கேட்கப்படுகிற போது பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.