மதச் சுதந்திரமும் மரபுகளும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது
மத அனுஷ்டானங்கள் சடங்குகள் ஆகியவற்றுக்கும் சிவில் உரிமைகளுக்கும் வேறுபாடு உண்டு. பிறப்பு தத்தெடுப்பு வாரிசு இறப்பு திருமணம் என அனைத்தோடும் தொடர்புடைய மத நிகழ்வுகளை அவரவர் சடங்குகள் படியும் வழக்குகள் படியும் நடத்திக் கொள்ளலாம். எனவே மதச்சுதந்திரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பிறப்பு தத்தெடுப்பு வாரிசு திருமணம் விவாகரத்து வழியாக எழும் உரிமைகள் மதத்தால் வழிகாட்டப்பட வேண்டுமா அரசியல் சாசன உத்தரவாதங்களாலா ? தனிப்பட்ட சட்டங்களும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அரசியல் சாசனம் சொல்வதை அரசு நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளது.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்து கோட் பில்கள் அமலில் உள்ளன. அதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விட்டது ?
உள்ளே இருக்கும் வரை அவரவர் சட்டம் வெளியே வந்துவிட்டால்
யார் வேண்டுமானாலும் தங்களுக்குள் எப்படி வேண்டுமென்றாலும் வாழ்ந்து கொள்ளலாம். எத்தனை சாதிகள் மதங்கள் பிரிவுகளும் தங்களுக்குள் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். தனி மனிதர்களும் தங்களுக்குள் விரும்பியபடி வாழ்ந்து கொள்ளலாம். ஆனால் பிரச்சனை என்று வந்து விவகாரங்கள் பொதுவில் வந்துவிட்டால் அவரவருடைய வழக்குகளையெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது. பொதுவாக அரசு என்ன சட்டம் போட்டு வைத்துள்ளதோ அதை வைத்து தான் தீர்வுகள் கொடுக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலேயே கோவா மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது. அதனை முன்னுதாரணமாகக் கொண்டு பொது சிவில் சட்டத்தை நாடு முழுமைக்கும் எப்படி நீட்டிப்பது எப்படி என்று பார்க்கலாம்.